'இனிமேல் பச்சைத் துண்டு தலப்பாகையுடன் தான் வருவேன்' - வைகோ சபதம்

புதன், 4 மே 2016 (11:55 IST)
விவசாயிகள் போராட்டம் நடத்திட நம்பிக்கையூட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
 

 
பல்லடம் அருகே பெரும்பாளியில் 94 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு திங்களன்று மாலை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கலந்துகொண்டார்.
 
அப்போது பேசிய வைகோ, "அடுத்து வரும் ஒராண்டுக்குள் விவசாயிகள் விரும்பும் இடத்தில் இது போன்ற ஒரு மாநாடு நடைபெறும். அதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள். ஒரு பைசா மின்சார கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நடைபெற்ற விவசாய சங்க போராட்டத்தின் போது பல விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
 
இப்போது ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இனி மேல் தான் நம்பிக்கையூட்ட வேண்டும்.
 
இனி மேல் வேட்டி கட்டிக் கொண்டு வரும் போதெல்லாம் பச்சைத் துண்டு தலப்பாகையுடன் தான் வருவேன். விவசாய விளை நிலத்தில் கலப்பை எடுத்து உழுவேன். ஸ்டாலின், அன்புமணி உழுவார்களா?
 
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா தேர்தல் அறிக்கை அமுத சுரபி போன்றது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளும் மேம்படுத்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் உள்பட அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும்.
 
30 சதவிகிதம் தான் விவசாயிகளுக்கு கடன் கிடைத்துள்ளது. 70 சதவிகிதம் விவசாயி என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் துரோகிகள்தான். பாண்டியாறு- புன்னம்புழா, அவிநாசி- அத்திகடவு திட்டங்களை நிறைவேற்றுவோம். 66 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்து பேசியது நான் தான். அப்போது அதிமுகவை சேர்ந்த பி.எச்.பாண்டியன் ஆதரித்து பேசினார். அத்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தரவில்லை.
 
சாதி மோதல் என்பது பெட்ரோல் போன்றது, தீ பற்றினால் சர்வ நாசம் ஆகும். சாதி மோதலை யாரும் ஊக்கப்படுத்தாதீர்கள். சாதியை இழிவுப்படுத்தி பேசக்கூடியவர்களுக்கு நான் சீட்டு வழங்க மாட்டேன். நான் சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டவன்.
 
லட்சியம், கொள்கையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமைய விருப்பப்படுபவர்கள் வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்