குடோனில் பணம் பதுக்கிய முன்னாள் அமைச்சரின் நண்பர் அன்புநாதன் தாய்லாந்திற்கு தப்பியோட்டம்?

திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:05 IST)
குடோனின் பணம் பதுக்கிய வழக்கில் கரூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதன், தாய்லாந்து நாட்டிற்குத் தப்பிச் சென்று விட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
 

 
முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் நண்பரும், கரூர், அதிமுக பிரமுகருமான அன்புநாதனின் குடோன் மற்றும் வீட்டில் இருந்து, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, ரூ.4.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் முன் ஜாமீன் பெற்றார்.
 
கடந்த 17ஆம் தேதி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், அன்புநாதன் வீட்டில் கைப்பற்றிய பணம், நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்ததால், அன்புநாதன் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகச் சென்று அன்புநாதனின் சகோதரி வசிக்கும் திண்டுக்கல், அவர் பள்ளி நடத்தி வரும் கோயம்புத்தூர், மற்றும் கரூருக்குச் சென்று அவரைத்தேடினர். ஆனால், மூன்று இடங்களிலும் அவர் இல்லை.
 
இந்நிலையில், அன்புநாதன் தாய்லாந்து நாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்ட தகவல் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்