விவசாய நிலத்திற்கான பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், மனஉளைச்சலில் உழவர் சாவு என்றும், இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற உழவர், அவரது நிலத்திற்குச் செல்வதற்கான பாதை தனியாருக்கு கிரயம் செய்து தரப்பட்டநிலையில், தமது நிலத்திற்கு பாதை அமைத்துத் தர வேண்டி தொடர் கோரிக்கைப் போராட்டம் நடத்தி வந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். சக்திவேலின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சக்திவேலின் வேளாண் நிலத்திற்குச் செல்வதற்காக பாதையாக அப்பகுதியில் இருந்த ஏரி தடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், காலப்போக்கில் ஏரி தடம் தனியாருக்கு கிரயம் செய்து தரப்பட்டுவிட்டது. இதனால் விவசாய நிலத்திற்குச் செல்ல பாதையில்லாமல் தவித்து வந்த சக்திவேல், 3 ஆண்டுகளாக அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்து வந்துள்ளார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள், உனது நிலத்தை விற்றுவிட்டு போ என்று கூறி அவமதித்துள்ளனர்.
அதைக் கண்டித்தும், தமது கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை நாளான இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த சக்திவேல், அதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமது மனஉளைச்சலை வெளிப்படுத்தும் வகையில் காணொலி வெளியிட்டுள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.