குடியாத்தம் அடுத்த கே.வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). இவரது மனைவி ரஞ்சினி (29). தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த போது, மனைவி ரஞ்சினி மீது பெருமாளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தைகளுடன் குஜராத்துக்கு வருமாறு தனது மனைவியிடம் பெருமாள் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு ரஞ்சனியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் பெருமாள். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்ற பெருமாள் ரஞ்சினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார். இதையடுத்து ரஞ்சனிக்கு செய்ய வேண்டிய சடங்குகளை முடித்து சில நாட்களில் ராணுவப் பணிக்கு திரும்பினார்.
இதற்கிடையே, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ரஞ்சினியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரேதப் பரிசோதனையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சினி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு பெருமாளுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராகிய பெருமாள் தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெறித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும் தற்கொலை என அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை நம்ப வைத்ததாகவும் கூறினார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பெருமாளை கைது செய்தனர்.