அம்மாவின் வார்த்தையை மறந்து நடந்த வெறியாட்டம்: டிடிவி இரங்கல்!

வெள்ளி, 22 மே 2020 (13:22 IST)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தூத்துக்குடி சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். 
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி நடத்தப்பட்ட போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 13 பேர் பலியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. 
 
ஊரடங்கு அமலில் உள்ளதால், இன்று தூத்துக்குடியில் இரங்கல் அனுசரிக்க மக்கள் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பலர் இரங்கலை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டில் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இவரைத்தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். 
 
அவர் பதிவிட்டுட்டுள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை குறிவைத்து குண்டுகளைப் பாய்ச்சி கொன்று குவித்தனர். அதோடு நிற்காமல், அடுத்தடுத்த நாட்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், செயற்பாட்டாளர்கள் மீது தேவையின்றி வழக்குகளைப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தனர்.
 
தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வார்த்தைகளை மறந்து நிகழ்த்தப்பட்ட  இந்த  வெறியாட்டம் நடந்து  இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.  
 
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை உணர்ந்து தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனே கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும். 
 
ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் என்றைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மக்களுக்கு துணை  நிற்கும் என்ற  உறுதியை அளித்து, உயிரிழந்தவர்களுக்கு  இரண்டாமாண்டு நினைவு தினத்தில் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன் என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்