வைகோவை அவமதித்த அமெரிக்க தூதரகம்; ஏகாதிபத்திய திமிர் என வைகோ குற்றச்சாட்டு

புதன், 2 செப்டம்பர் 2015 (15:15 IST)
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோரி, நேரில் மனு கொடுக்கச் சென்றபோது சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அவமதிப்பு செய்து விட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல்லிவந்த அமெரிக்கா, திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு, உள்ளூர் அளவிலான விசாரணையே போதுமானது என்று கூறிவிட்டது. அமெரிக்காவின் இந்த முடிவிற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தமிழ் அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
 
இந்நிலையில், மதிமுக சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு வைகோ தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள், அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுக்கச் சென்றனர்.
 
அப்போது, அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தி, 10 நிமிடம் வரை காத்திருக்க வைத்துடன், தூதரகத்திற்குள் சென்று மனு கொடுப்பதற்கும், தூதரக துணை அதிகாரியை சந்திப்பதற்கும் அனுமதி மறுத்து விட்டனர். மேலும், துணைத்தூதர் அல்லாத ஒருவரை வைத்து மனுவை பெற்றுக் கொண்டனர்.
 
அமெரிக்க துணை தூதரகத்தின் இந்த செயலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். முறைப்படி அனுமதி பெற்றே தூதரக அதிகாரியை சந்திக்க வந்ததாகவும், ஆனால், ஏகாதிபத்திய திமிரையும், அகம்பாவத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் தூதரக அதிகாரிகள் தம்மை அவமதித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்