சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,957-ல் இருந்து ரூ.12,716-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,674-ல் இருந்து ரூ.8555-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக விமான டிக்கெட் ரூ.11,531-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – சேலம் இடையே வழக்கமாக ரூ.2,433-ஆக உள்ள விமான டிக்கெட் கட்டணம் ரூ.5572-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை – கோவை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3342-ல் இருந்து ரூ.8616-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல வெளிநாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.