மாநிலங்களவைக்கு அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றித் தேர்வு

வியாழன், 26 ஜூன் 2014 (18:19 IST)
மாநிலங்களவை உறுப்பினர் டி.எம். செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த அ. நவநீதகிருஷ்ணன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
முன்னதாக, இந்தக் காலியிடத்துக்கு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்கள் நால்வரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த நவநீதகிருஷ்ணன் போட்டியின்றித் தேர்வு பெற்றார்.
 
இதனைத் தேர்தல் நடத்தும் அதிகாரி அ.மு.பி. ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
 
அ. நவநீதகிருஷ்ணன், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர், தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நவநீதகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்