"2 நாள் மழைக்கே இற்றுப் போன தமிழகம்- அரசுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக
புதன், 2 நவம்பர் 2022 (22:56 IST)
2 நாள் மழைக்கே இற்றுப் போன தமிழகம் என்றும் வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் மக்கள் என்று திமுக அரசு மீது கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் முதல்வரும், எதிக்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்து அந்த அறிக்கையில்,
''சென்னை நகராட்சி நிர்வாகத்தினரோ, ஒப்பந்ததாரரோ எந்த அறிவிப்பும், எச்சரிக்கைப் பலகையும், பணி நடைபெறும் இடங்களில் வைப்பதில்லை.
கடந்த வாரம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் தோண்டப்பட்ட பள்ளத்தில்எந்த முன்னெச்சரிக்கை பலகையும் இல்லாததால், ஒரு தனியார் தொலைக்காட்சி ஊழியர் அதில் விழுந்து மரணம் அடைந்த அவலமும் நிகழ்ந்துள்ளது.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளித்ததற்கான காரணம் வெள்ள நீர் கால்வாயில் இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பணியை தொடராமலும், திட்டமிட்டு முழுமையாக முடிக்காததாலும், வெள்ள நீர் போக முடியாமல் நிறைய இடங்களில் தேங்கியுள்ளது. இன்னும் பெருமளவில் பருவ மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இனியும், இந்த ஏமாற்று அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடீநீரை காய்ச்சி பருக வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இனியும் எதற்கெடுத்தாலும் அம்மாவின் அரசின் மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்பாமல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்த விடியா தி.மு.க. அரசுக்கு உண்டு. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.