தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர் “அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சி வெற்றிக்கு பாடுபட வேண்டும். 10 மாதங்களுக்கு முன் ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசு வெகு விரைவாக மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டாலும், நிர்வாக திறமையின்மையாலும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தற்போதைய கொரோனா காலத்தில் தி.மு.க.வினர் மக்களை நாடி எந்தவித சேவைகளையும் செய்யவில்லை. பொங்கல் பரிசின் தரம் குறித்து நாடே அறியும். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தோம். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது? என்பதை நாம் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து எடுத்து சொல்லி பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.