அதிமுக விதிகளை மாற்றும் எடப்பாடி அணி ; நாளை நிர்வாகிகள் கூட்டம்

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (14:05 IST)
அதிமுகவின் சட்டதிட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சில அறிவிப்புகளை அடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 
 
பதவிகள் ஒதுக்குவது தொடர்பாக சிக்கல் நீடிப்பதால், பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. எனினும், இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் கட்சியின் சட்டதிட்ட விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  


 

 
அதேபோல், இரு அணிகளின் இணைப்பு பற்றியும், அதிமுக என்கிற கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த முடியாத நிலையில், கட்சியை வழிநடத்த வழிகாட்டும் குழு அமைப்பது தொடர்பாகவும் நாளை விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், நாளைக்குள் இரு அணிகளும் இணைந்து விடும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்