தமிழக தேர்தல் களம் அனல் பறக்க சுழன்று கொண்டிருக்கிறது. திமுக, தேமுதிக-மக்கள் நல கூட்டணி, பாமக, காங்கிரஸ், பாஜக என தேர்தலில் போட்டியிடும் பல முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்த அனல் பறக்கும் தேர்தல் களத்தில் பிரதான கட்சியான அதிமுக இன்னமும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது ஆட்சியின் திட்டங்களையும், சாதனைகளையும், எதிர் கட்சிகளின் கடந்த கால ஆட்சியின் குறைகளையும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
திமுக உள்ளிட்ட பல கட்சிகள் மதுவிலக்கு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும் இந்த தேர்தலில், தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பேசப்படுவதாக தெரியவில்லை. கடந்த தேர்தல் வரை இலவசங்கள் பல அறிவிக்கப்பட்டன இதனால் தேர்தல் அறிக்கை தேர்தலில் முக்கிய பங்காற்றியது.
அதிமுக தேர்தல் அறிக்கை மீது எதிர்பார்ப்பை உருவாக்கவே இந்த தாமதம் என கூறப்படுகிறது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல கவர்ச்சி திட்டங்களை தேர்தல் நெருங்கும் சமையத்தில் தேர்தல் அறிக்கை மூலம் தெரிவித்து தேர்தல் களத்தை அதிமுகவுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.