கொரோனாவால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது, அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கற்களை கொண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அளவில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் நடத்திய நிலையில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவரை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. மருத்துவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். மருத்துவர்களுக்கும், கடவுளுக்கும் மட்டும் தான் உயிரைக் காப்பாற்றும் சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா வந்து இறந்துவிட்டால், புதைப்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்று கல்லைக் கொண்டு அடிப்பதும், ஆம்புலன்ஸை உடைப்பதும் நியாயமா? சுடுகாடு யாருக்குச் சொந்தம்?
வெளியூருக்குப் படப்பிடிப்புக்குச் சென்ற போது, ஒரு குரங்கு வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டது. உடனே அந்த இடத்தில் சுமார் 100 குரங்குகள் கூடிவிட்டது. அனைத்து குரங்குகளும் கண்ணீர் விட்டு அழுதன. அந்தக் குரங்கிற்கு இருக்கிற அறிவு, நமக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது. தயவு செய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று வேதனையுடன் பேசியுள்ளார்.