நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகல்: சின்னம்மா என கூறுவதை நிறுத்துங்கள்!

புதன், 28 டிசம்பர் 2016 (13:41 IST)
கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து வந்த நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து அதிமுகவின் தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்கவேண்டும் என கோரிக்கை நிலவி வந்தது.
 
இந்நிலையில் இதனை கடுமையாக விமர்சித்தார் நடிகர் ஆனந்தராஜ். ஜெயலலிதா தற்போது தான் இறந்திருக்கிறார் அதற்குள் அந்த பதவி பற்றி பேச வேண்டாம். சசிகலா தலைமை பதவியை ஏற்க இது சரியான நேரமில்லை என கூறிவந்தார் ஆனந்தராஜ்.
 
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவை வேறு யாருடனும் ஒப்பிட்டு பேசாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு சசிகலாவை சின்னம்மா என கூறுவதை நிறுத்துங்கள் என ஆனந்தராஜ் கூறினார். அதிமுகவில் இருந்து விலகிய தாம் வேறு கட்சியில் சேரப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்