ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் பொருட்கள் விற்பனை மையங்கள் தமிழகத்தின் முக்கியமான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இருக்கின்றன. இங்கு சூடான பால் மற்றும் பாதாம் பால் குறைந்த விலையில் கிடைப்பதால் அப்பகுதிகளில் பயணிக்கும் மக்கள் ஆவின் பாலகத்திற்கு அதிகமாக வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் ஆவின் பால் விலையேற்றத்தை தொடர்ந்து விற்பனையகங்களில் விற்கப்படும் சூடான் பால் விலையும் உயர்ந்துள்ளது. இதுவரை 7 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சூடான் பால் இனி 10 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பாதாம் பால் 12 ரூபாய்க்கும் விற்பதாக ஆவின் பாலக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஏற்கனவே பல பகுதிகளில் காய்ச்சிய பால் 10 ரூபாய்க்கும், பாதாம் பால் 15 ரூபாய்க்கும் விற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முதலில் குடிக்கும் கப்களை ஆவின் நிறுவனமே வழங்கியதாகவும், தற்போது பிளாஸ்டிக் தடையால் அவர்கள் கப் வழங்குவதில்லை, கடை ஒப்பந்த உரிமையாளர்களே வாங்கி கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது சாதாரண தேநீர் கடைகளில் ஒரு டீயின் விலை குறைந்த பட்சம் 10 ரூபாய் முதலும், காபி ரூபாய் 15 முதலும் விற்கப்பட்டு வருகிறது. பல தேநீர் நிலையங்கள் தனியார் பால் நிறுவனங்களிடமே தங்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் முதலான பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் விலையை பொருத்தமட்டில் ஆவின் பாலகங்களில் விற்கப்படும் விலையை விட சற்று அதிகமாகவே வைத்து விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆவின் பாலகங்களில் விலை உயர்ந்தால் தனி தேநீர் அங்காடிகளும் தங்கள் விலையை உயர்த்தக்கூடும் என கூறப்படுகிறது.