காதலித்து திருமணம் செய்த கணவனை, கள்ள உறவுக்காக, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை ஓராண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமால்புரம் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் தஞ்சையில், சரணவன் என்பவரிடம் கட்டட வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சரணவனின் அக்காள் மகள் ரேவதியுடன் பழகியுள்ளார். இது நாளடைவில் காதலாகி இருவரும் தருமபுரியில் திருமணம் செய்தனர். இவர்கள் தஞ்சையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 6 வயது ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இளஞ்செழியனுடன் அம்மாபேட்டை அருகே உள்ள பெட்டுவாச்சாவடியைச் சேர்ந்த இளவாளன் என்பவர் கட்ட வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் இருவரும் நண்பர்களாக மாறியுள்ளனர்.
இதையடுத்து, இளவாளனை அடிக்கடி இளஞ்செழியன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரேவதிக்கும் இளவாளனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இளஞ்செழியன் கட்டட வேலைக்காக கடந்த 2017-ம் ஆண்டு தஞ்சையிலிருந்து மதுரைக்கு சென்றுவிட்டார்.
அதனால், வீட்டில் தனியாக இருந்த ரேவதியுடன், இளவாளனுக்கும் நெருக்கம் அதிகமாகி கள்ளத்தொடர்பு ஏற்பட்டது, இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க இளஞ்செழியன் தஞ்சை வந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் இளவாளன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை கூறியுள்ளனர். இதனால் மனைவியை இளஞ்செழியன் கண்டித்துள்ளார். இதற்கிடையே மனைவியை திட்டிவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டார் இளஞ்செழியன்.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி, ரேவதி தனது கணவர் இளஞ்செழியனை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, 'இனிமேல் சண்டை போட வேண்டாம். சேர்ந்து வாழ்வோம்' என கூறியுள்ளார். இதைக் கேட்டதும் இளஞ்செழியன் தஞ்சைக்கு வந்துள்ளார் அப்போது இளவாளனும் இளஞ்செழியனும் மது அருந்தியுள்ளார். இவர்களுடன் அரிதுவாரமங்கலத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரும் மது அருந்தியுளார். இளஞ்செழியனுக்கு போதை தலைக்கு ஏறியதும், அங்கு மறைந்திருந்த ரேவதி, இளவாளன், கலியபெருமாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து, துண்டால் இளஞ்செழியன் கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர்.
இளஞ்செழியன் உடலை வல்லம் அருகே மின்னாத்துார் ஏரி அருகேயுள்ள தண்ணீர் வடிகால் குழாயில் திணித்து புதைத்துவிட்டனர்.
ஒன்றும் நடக்காதது போல் எப்போதும் போல் ரேவதி இருந்துள்ளார். இந்நிலையில், தஞ்சை சென்ற மகன் நீண்ட நாள்களாக வீட்டுக்கு வராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த தாய் தங்கம்மாள், மனைவி ரேவதியிடம் கேட்டபோது, எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி, அம்மாபேட்டை போலீஸில் மகனைக் காணவில்லை என்று புகார் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்தது.
ஆனால் மகனை கண்டுபிடிப்பதில் போலீஸ் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், தங்கம்மாள் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்தார். மதுரை உயர் நீதிமன்றம், காணாமல் போன இளஞ்செழியனை உடனே கண்டு பிடிக்கும்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாபேட்டை போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, அம்மாபேட்டை போலீஸார் இளஞ்செழியன் செல்போன் எண்ணுக்கு வந்த எல்லா அழைப்புகளையும் சோதனைசெய்தனர். மேலும், இளஞ்செழியன் மனைவி ரேவதியின் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ரேவதியிடம் போலீஸார் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இளஞ்செழியனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்து, உடலை மின்னாத்தூர் ஏரி அருகே வடிகால் குழாயில் மறைத்து வைத்ததையும் ஒப்புக்காண்டார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், எலும்புக் கூடாக இருந்த உடலை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இளஞ்செழியன் மனைவி ரேவதி, இளவாளன், அவரது நண்பர்கள் கலியபெருமாள், மற்றும் உடலை தூக்கி செல்ல உதவிய ஆட்டோ டிரைவர் மணி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.