சாப்பாடு ஊட்டும்போது சோகம்! மழலையர் பள்ளியில் 2½ வயது குழந்தை மூச்சுத்திணறி பலி

சனி, 23 பிப்ரவரி 2019 (08:40 IST)
சாப்பாடு ஊட்டும்போது மழலையர் பள்ளியில் 2½ வயது குழந்தை மூச்சுத்திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பிரசாத் (வயது 37). இவருடைய மனைவி சுகந்தி ஷர்மிளா (28). இவர்கள் இருவரும்  சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார்கள்.
 
இவர்களுக்கு 2½ வயதில் ஜோசப் என்ற மகன் இருந்தான். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்க்க வீட்டில் யாரும் இல்லை. இதனால் வண்ணாரப்பேட்டை எம்.சி.எம். கார்டன் 1-வது தெருவில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் குழந்தை ஜோசப்பை சேர்த்தனர். அந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
 
நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் குழந்தையை மழலையர் பள்ளியில் விட்டுவிட்டு, குழந்தைக்கு சாப்பாடும் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
 
இந்த நிலையில் மதியம் சாப்பாடு கொடுக்கும்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை ஜோசப் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
இதை கேட்டுஅதிர்ச்சி அடைந்த பிரசாத் மற்றும் அவருடைய மனைவி சுகந்தி ஷர்மிளா இருவரும் பதறி அடித்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு தங்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியதை கேட்டு கதறி அழுதனர்.
 
கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இதுபற்றி மழலையர் பள்ளி நிர்வாகி லதாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்