சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை

புதன், 10 மே 2023 (22:40 IST)
கரூர் அருகே ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.
 
கடந்த 04.02.2023 அன்று எர்ணாகுளம் முதல் காரைக்கால் வரை செல்லும் ரயிலில் கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளுடன் பொது பெட்டியில் டிக்கெட் பெற்று பயணம் செய்து கொண்டிருந்தனர்.  அவர்களுடன் கணேஷ்குமார் என்கின்ற 62 வயது முதியவர் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டிருந்தனர். ரெயில் வண்டியானது புகளூர்  ரயில் நிலையம் வந்த போது அதிகாலை 5.45 மணியளவில் இருக்கையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் கணேஷ்குமார் ஈடுபட்டுள்ளான். இதனை பார்த்த சக பெண் பயணி சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளார்.  சிறுமியின் தாயாரிடம் சத்தமிட ரயில் கரூர் ரயில் நிலையம் வந்தவுடன்  கரூர் ரயில் நிலைய போலீசாரிடம் கணேஷ் குமாரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக கரூர் ரயில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத்தண்டணை, 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 50,000 ரூபாயை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்