நாய் கடித்து 9 ஆடுகள் பலி ; 5 ஆடுகள் படுகாயம் - பரமத்தி வேலூரில் பயங்கரம்

வியாழன், 24 நவம்பர் 2016 (18:42 IST)
கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் ஊராட்சிக்குட்பட்ட சாலியபாளையம் அருகே தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மணி(42).


 



இவர் ஒரு கால்நடை விவசாயி. தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 30செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல தனது நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீடு திரும்பி உள்ளார்.
 
ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வர் அவர் மீண்டும் சென்ற போது, 3பெரிய ஆடுகளும், 6 குட்டி ஆடுகளும் வெறிநாய்கள் கடித்து இறந்திருந்தது தெரியவந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 5க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்திருந்தன. 
 
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவர் தண்டபாணி, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் பாதித்த ஆடுகளை பார்வையிட்டனர். பிறகு பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு கால்நடை மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து பாதிக்கப்பட்டவர் மணி வேதனையுடன் கூறுகையில், இப்பகுதி சுற்று வட்டாரத்தில் கடந்த மாதத்தில் விவசாயிகளால் பாதுகாக்கப்பட்ட பட்டி கொட்டகையில் புகுந்து 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்தன. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது ஒரு படி முன்னேறி மேய்ச்சலுக்கு விடும் ஆடுகளை வேட்டையாடி கடித்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 
 
இதை தடுக்க மாவட்ட ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் வாழ்வதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்