800 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சிக்கல்

புதன், 29 மே 2013 (17:20 IST)
FILE
அனைவருக்கும் கட்டாயக் கல்வி அமல்படுத்தப்படுவதால், தனியார் பள்ளிகளுக்கு இடவசதியை கண்டிப்புடன் கடைப்பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 800க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் இட வசதி நிர்ணயம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. மதுரை மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற்ற இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் வல்லுநர் குழுத் தலைவராக பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன், உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட ஏழு துறைகளைக் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். இந்தக் குழு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், பள்ளிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை புதிதாகப் பிறப்பித்துள்ள 48 ஏ விதியை ரத்து செய்ய வேண்டும், ஏற்கெனவே இயங்கி வரும் பள்ளிகளுக்கு இடவசதியைக் காரணம் காட்டி, அங்கீகாரத்தை ரத்து செய்வதைத் தவிர்த்து தொடர்ந்து பள்ளிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகளுக்கு வேண்டுமானால் புதிய விதியை அமல்படுத்தலாம். மேலும் இது போன்ற விதிகள் தனியார் பள்ளிகளை முடக்குவதற்கான ஒரு உபாயம் என்று புகார் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறுகையில், தமிழகம் முழுவதும் ஏற்கெனவே 2004 ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசு பிறப்பித்த விதியை ஒவ்வொரு முன்றாண்டுகளுக்கு ஒருமுறையும் தளர்வு கொடுத்து அங்கீகரம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அனைவருக்கும் கட்டாயக் கல்வி அமல்படுத்தப்படுவதால், தனியார் பள்ளிகளூக்கு இடவசதியை கண்டிப்புடன் கடைப்பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2004ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி தமிழகம் முழுவதும் உள்ள 800க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்காக சட்ட விதியில் எந்த அளவுக்கு தளர்த்தலாம் என்று கேட்டு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை, சேலம், கோவையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று மதுரையில் நடக்கிறது. அடுத்து திருச்சியில் நடத்தப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்