பால் பொருட்களின் விலை 8 முறை உயர்வு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (16:02 IST)
‘’விடியா அரசு எல்லா மக்கள் நலத்திட்டத்தின் பெயரையும் அவர்களின் குடும்பப் பெயருக்கு மாற்றிக்கொள்வது போல, பால்வளத்துறையையும் இனிமேல் ‘பாழ்வளத்துறை என்று மாற்றிக்கொண்டால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உதவும் ‘’என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு.  மு.க.ஸ்டாலின் அவர்கள், பதவியேற்ற 28 மாத காலத்திற்குள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை 8 முறை உயர்த்தி, மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

அதிமுக  ஆட்சியின்போது, நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, நாட்டில் உள்ள பிற அரசு கூட்டுறவு அமைப்புகளுக்கே சவால் விடும் அளவிற்கு ஆவின் வளர்ச்சி பெற்றது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த, இந்த 28 மாதங்களில் ஆவினை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டது.

விடியா அரசு எல்லா மக்கள் நலத்திட்டத்தின் பெயரையும் அவர்களின் குடும்பப் பெயருக்கு மாற்றிக்கொள்வது போல, பால்வளத்துறையையும் இனிமேல் ‘பாழ்’வளத்துறை என்று மாற்றிக்கொண்டால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உதவும்.

பால் கொள்முதலில் இருந்து விற்பனை வரை எல்லாவற்றிலும் சரிவை சந்தித்து வரும் ஆவின் நிறுவனம், மறைமுகமாக தனியார் நிறுவனங்களுக்கு துணை போகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றத்தை ரத்து செய்திட வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்