குளத்தில் கட்டிய 8 வீடுகள் திடீரென சரிந்ததால் பரபரப்பு!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (09:11 IST)
குளத்தில் கட்டிய 8 வீடுகள் திடீரென சரிந்ததால் பரபரப்பு!
ஆறு, குளம், கண்மாய் உள்பட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் கட்டுவது கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இதன் விபரீதம் மழை வரும் போது தான் தெரியும்
 
இந்த நிலையில் காணாமல் போன ஆறுகள் குளங்கள் உள்பட நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் அதில் இருப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு செல்லாமலேயே உள்ளன 
 
இந்த நிலையில் நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 8 வீடுகள் அடுத்தடுத்து திடீரென சரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த எட்டு வீடுகளில் இருந்த பீரோ கட்டில் ஆகியவை குளத்தில் உள்ள நீரில் மூழ்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த எட்டு வீடுகளில் குடியிருந்தவர்கள் வீடு இடிவது குறித்த அறிகுறி தெரிந்ததும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் இந்த சம்பவத்தால் எந்தவித உயிர் இழப்பும் இல்லை என்று கூறப்பட்டாலும் அந்த வீடுகளில் உள்ள பொருள்கள் பெரும்பாலானவை குளத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இனிமேலாவது ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் வீடுகள் கட்டாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்