மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் தொடங்கும் நிலையில் மாணவர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடக் கூடாது என தேர்வு துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது. இதில் +2 தேர்வுகள் முதலாவதாக தொடங்குகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்குகின்றன.
இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தேர்வு துறை எச்சரித்துள்ளது.
அதன்படி, தேர்வறையில் துண்டுத்தாள், பிட், குறிப்புகள் வைத்து எழுதுவது கண்டறியப்பட்டால் அன்றைய தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதுடன், அடுத்த 1 ஆண்டுக்கு எந்த தேர்வும் எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும். புத்தகம், துண்டுத்தாள் வைத்து எழுதி பிடிபட்டால் தேர்வரின் அனைத்து பாடத் தேர்வுகளும் எழுதுவதற்கு தடை செய்யப்படும்.
மற்ற மாணவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுவது, பேப்பர் பரிமாற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட பருவங்கள் வரை தேர்வு எழுத தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பிடிபட்டால் பொதுத் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். தேர்வறை கண்காணிப்பாளரை மிரட்டுவது, தாக்குவது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கும் குற்றத்தின் அடிப்படையில் தேர்வு எழுத தற்காலிக தடை அல்லது நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K