பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை!- அமைச்சர் மனோதங்கராஜ்

sinoj

வியாழன், 4 ஏப்ரல் 2024 (21:55 IST)
பிரதமரின் மனதில் இந்தியர்களும் இல்லை, இந்திய விவசாயிகளும் இல்லை. நடு தூக்கத்தில் பிரதமரை எழுப்பி கேட்டால் கூட அம்பானி, அதானி பெயர்களையே அவர் உச்சரிப்பார். ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எதிரானதாகவே இதுவரை இருந்துள்ளது என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
2014 தேர்தலின் போது பேசிய மோடி "நம் விவசாயிகள், கையில் கயிறு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது; விவசாயிகள் அதிக கடன்களை வாங்கக்கூடாது; கடன்காரர்கள் கதவுகளைத் தட்ட வழிவகுக்கக் கூடாது; விவசாயிகளுக்கு கடன் கொடுப்பது அரசு மற்றும் வங்கிகளின் பொறுப்பு அல்லவா? விவசாயிகளின் நிலைமை மேம்பட்டால் அது அவர்களுக்கு மட்டும் முன்னேற்றம் இல்லை, வயல்களின் வேலை செய்யும் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்" என உணர்ச்சித்ததும்ப பேசினார். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய ஒரே தலைவர், மோடி தான், என அப்பாவி மக்கள் நம்பும் அளவுக்கு நடித்து காட்டினார்.
 
ஆனால் இவரது பேச்சுக்கும் ஆட்சிக்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். ஆனால் பாஜக, தனது போலி செய்தி பரப்பும் கட்சிக்காரர்களை வைத்து, மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை என பரப்புகின்றனர்.
 
விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, இடுப்பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராடிய போது, அவர்களின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 23 வயது இளம் விவசாயியை சுட்டு கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் 177 சமூக வலைதள பக்கங்களை முடக்க X-தளத்திற்கு பாஜக அரசு அறிவுறுத்தி, அவற்றை முடக்க செய்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையில் உடன்பாடு இல்லை என்றும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகவும் X-நிறுவனம் கருத்து தெரிவித்தது.
 
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 4.4%-தில் இருந்து 2.5%-மாக குறைக்கபட்டுள்ளது. மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையையாவது பாஜக அரசு விவசாயிகளின் நலனுக்காக சரியாக பயன்படுத்தியிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
 
முந்தைய, காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகளின் 72,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பாஜக அரசு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ. 25 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அது போல கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30% -த்தில் இருந்து 22%-மாக குறைத்துள்ளது. அனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவோ சலுகை அளிக்கவோ மனம் வரவில்லை.
 
மறுபுறம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று 2014-ல் மோடி அளித்த வாக்குறுதி ஒரு பெரிய ஏமாற்று வேலை. 2014-ல் விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ரூ.8,000 ஆக இருந்தது. அது இரட்டிப்பாகியிருந்தால், பணவீக்க விகிதங்களின் அடிப்படையில் 2024-ல் மாத வருமானம் 22 ஆயிரமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், விவசாயிகளின் சராசரி மாத வருமானம் வெறும் ரூ.10,200 தான்.
 
மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவசாயிகள் போராட்டம் 1 ஆண்டு வரை நீடித்தது. போராட்டத்தின் போது 750 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் குடும்பங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா-வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர், கேரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 விவசாயிகளை கார் ஏற்றி கொன்றார். இப்படி விவசாயிகளுக்கு எதிரான செயல்கள் மட்டுமே பாஜக ஆட்சியில் எங்கும் பரவியிருந்தது.
 
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை; விவசாய போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்கவுமில்லை, இழப்பீடு வழங்கவுமில்லை; ஆனால் பிரதமருக்கு அதானிக்கு கான்டராக்ட் பெற்றுத்தர நாடுநாடாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள மனமும் இருந்தது, நேரமும் இருந்தது. பிரதமரின் மனதில் இந்தியர்களும் இல்லை, இந்திய விவசாயிகளும் இல்லை. நடு தூக்கத்தில் பிரதமரை எழுப்பி கேட்டால் கூட அம்பானி, அதானி பெயர்களையே அவர் உச்சரிப்பார். ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எதிரானதாகவே இதுவரை இருந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்