மொபைல் மூலம் சொத்துவரி: சென்னை மாநகராட்சி அறிமுகம்

புதன், 9 செப்டம்பர் 2009 (18:26 IST)
இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னை மாநகராட்சியில் செல்போன் மூலம் சொத்துவரி செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று செல்போன் மூலம் சொத்துவரி செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொதுமக்கள் சொத்து வரி செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பல எளிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 10 மண்டலங்களிலும் பிளாக்பெரி கருவி மூலம் சொத்துவரி வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மண்டலம்-4ல், 'எப்போது வேண்டுமாலும் பணம் செலுத்தும் இயந்திரம்' (Any time pay machine) வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எப்பொழுது வேண்டுமானால் சொத்துவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதே மண்டலத்தில் ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை ரூ.4 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மிகப் பழமையான சென்னை மாநகராட்சியில் இந்தியாவில் முதல்முறையாக செல்போன் மூலம் சொத்துவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்று 9ம் தேதியில் இருந்து GPRS பயன்பாடுள்ள கைபேசி உபயோகப்படுத்துவோர் எந்தவிதமான இடையூறும் இன்றி தங்களின் கைபேசியில், ng pay என்ற தகவல் மையத்தை 56767 என்ற எண் மூலம் SMS மூலம் தொடர்பு கொண்டு தங்களின் பெயர், முகவரி மற்றும் மின் அஞ்சல் முகவரியை பதிவு
செய்துக்கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்தவுடன் தங்களின் வீட்டிற்கு உள்ளான சொத்துவரியை, தங்களின் சொத்துவரி விவரம் முதலியவற்றை பதிவு செய்து கைபேசி மூலம் தங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் சொத்துவரியை செலுத்தி அதற்குரிய பரிமாற்ற குறியீட்டை (Transaction ID) பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் சென்னையிலுள்ள அனைத்து சொத்து உரிமையாளர்கள் தங்களின் சொத்து வரியினை மிகவும் எளிய முறையில் செலுத்தி பயன் பெறலாம்.

இந்த புதிய நிர்வாகம் 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, சொத்துவரி ரூ.231.94 கோடி வரி வசூல் செய்தது. அதன் பிறகு 2006-2007ம் ஆண்டில் கூடுதலாக ரூ.60 கோடி வரி வசூல் செய்து, ரூ.291.26 கோடியும், 2008-2009ம் ஆண்டில் கூடுதலாக ரூ.40 கோடி என ரூ.323.80 கோடியும், வரி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் எந்த வித சொத்துவரியும் உயர்த்தப்படாமல் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.375 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.117 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய எளிய முறை காரணமாக சொத்துவரி கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்