தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 7.25 மணிக்கு வந்தது. பயணிகள் இறங்கிய பின்னர் மீண்டும் புறப்பட்ட ரெயில் தாம்பரம் சானட்டோரியம் அருகே திடீரென நின்றது. என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் வழியில் நின்றது.
இதனால் அடுத்து வந்த அனந்தபுரி, பொதிகை, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி பாசஞ்சர் ரெயில் ஆகியவை வண்டலூர், பெருங்களத்தூர், வரை வழியில் நிறுத்தப்பட்டன. முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பழுதாகி நின்றதால் எழும்பூரில் இருந்து குருவாயூர் புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரசும் வழியில் நிறுத்தப்பட்டன.
பழுதாகி நின்ற என்ஜினை சரிசெய்ய தாம்பரத்தில் இருந்து என்ஜினீயர்கள் வந்தனர். ஆனால் அவர்களது முயற்சி பயன் அளிக்கவில்லை. பின்னர் எழும்பூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு முத்துநகர் எக்ஸ்பிரஸ் எழும்பூருக்கு புறப்பட்டு வந்தது.
வழக்கமாக காலை 7.45 மணிக்கு எழும்பூர் வந்து சேரவேண்டிய முத்துநகர் 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. ரெயில் தாமதத்தால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.