கோவை‌யி‌ல் உலக தர‌ம் வா‌ய்‌ந்த ம‌த்‌‌திய ப‌ல்கலை‌க்கழக‌ம்: மு.க.‌ஸ்டா‌‌லி‌ன்

திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (09:28 IST)
கோவையில் உலக தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் அமைய உள்ளது என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியு‌ள்ளா‌ர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடங்களை தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகை‌யி‌ல், தமிழகத்தில் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தில்தான் பல்கலைக்கழகங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கென்று தனி பல்கலைக்கழகம் உள்ளது. 300 பேர் உள்ள கிராமத்தில் ஒரு பள்ளியும், 3 மைல்களுக்கு ஒரு நடுநிலைப்பள்ளியும், 5 மைல்களுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும் அமைய வேண்டும் என்று கர்மவீரர் காமராஜர் நினைத்தார். அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்க பள்ளிகள் இருந்தன. ஆனால் இப்போது அது 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

685 உயர்நிலைப்பள்ளிகளாக இருந்தது தற்போது 2 ஆயிரத்து 200 உயர்நிலைப்பள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கருணா‌நி‌தி ஆட்சியின் சாதனை. சத்துணவு திட்டத்தை முதன்முதலில் தொடங்கியவர் காமராஜர்தான். இன்று தமிழகத்தில் கல்வி பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பெல்லாம் உயர்கல்வி கற்க வேண்டுமென்றால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்போது வெளிநாட்டு மாணவர்கள் தமிழகத்துக்கு வந்து கல்வி கற்கும் அளவிற்கு கல்வியின் தரம் உயர்ந்துள்ளது.

உலகத் தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் கோவையில் விரைவில் அமைய உள்ளது. 1967ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் 110 கல்லூரிகள் இருந்தன. அதை தொடர்ந்து 1967 முதல் 1969ஆம் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 188 ஆக உயர்ந்தது.

இன்று 13 பல்கலைக்கழகங்கள், 4 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், கலை கல்லூரிகள், பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் உள்பட ஆயிரத்து 145 கல்லூரிகள் உயர் கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கருணா‌நி‌தி ஆட்சி கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.

கருணா‌நி‌தி அரசு எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் உயர் கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று இங்கு பேசிய அரசு செயலாளர் கூறினார். அதன்படி இந்த ஆண்டு புதிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எ‌ன்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்