கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த கோ‌ரி வழ‌க்கு

ஞாயிறு, 2 அக்டோபர் 2011 (14:50 IST)
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடக் கோரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பது பற்றி 1995-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அப்போதே கூடங்குளம் பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

கூடங்குளத்தில் அணு உலை பாதிப்பு ஏற்பட்டால், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கோ, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கவோ எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. அணு உலை விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு உருவானால் எலும்பு புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு மக்கள் ஆளாவார்கள்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டால், கூடங்குளத்தில் இருந்து 77 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நாகர்கோவில், பணகுடி, நாங்குனேரி, திருச்செந்தூர், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் மற்றும் கேரளா மாநிலத்தின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும், 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாசுதேவநல்லூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல், கால்நடைகள், செடி, கொடிகளும் அழிந்து போய்விடும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகளை தொடர்ந்து செய்வதற்கும், பணிகளை முடித்து மின் உற்பத்தியை தொடங்குவதற்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. அதனால்தான் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இடிந்தகரையில் அந்தப் பகுதி மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து 170 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கும், மருத்துவ வசதிக்கும், மறுவாழ்வுக்கும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், அதற்கான நிதியை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும். இதையெல்லாம் செய்து முடிக்கும் வரை கூடங்குளம் அணு மின்நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்