காதல‌ர்களுக்கு கடும் கட்டுப்பாடு: பொது இடங்களில் அத்துமீறினா‌ல்....

சனி, 13 பிப்ரவரி 2010 (10:19 IST)
'காதலர் தினம்' நாளை கொண்டாட‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல் செ‌ன்னை காதல் ஜோடிகளுக்கு, காவ‌ல்துறை‌ கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மெரினா கடற்கரை போன்ற பொது இடங்களில் அத்துமீறி நடக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆ‌ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதல் ஜோடியினர் இந்த தினத்தை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். சென்னையிலும், காதலர் தினத்தை சந்தோஷமாக கொண்டாட காதல் ஜோடிகள் தயாராக உள்ளனர். சில அமைப்புகள் காதலர் தினத்தை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அதையும் மீறி `காதலர் தினம்' கொண்டாட்டம் நாளை சென்னையில் உற்சாகமாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலர் தினத்தை அடிப்படையாக வைத்து, காதல் ஜோடியினர் பொது இடங்களில் முத்தம் கொடுத்தல், கட்டி அணைத்தல் போன்ற எல்லை மீறிய செயலில் ஈடுபடுவதற்கு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கமாக இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

காதலர்கள், காதலர் தினத்தை சந்தோஷமாக கொண்டாடலாம். ஆனால், அதே நேரத்தில் பொது இடங்களில் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவ‌ல்துறை‌யின‌ர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, எலியட்ஸ் பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற காதலர்களின் உல்லாச இடங்களில் காவ‌ல்துறை‌யின‌ர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். அதோடு சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'காதலர் தினம்' பற்றி செ‌ன்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரனிடம் செ‌ய்த‌ியாள‌ர்கள் கேள்வி எழுப்பின‌ர். அ‌ப்போது, மெரினா போன்ற பொது இடங்களில் காதல் ஜோடியினர் காதலர் தினத்தை சந்தோஷமாக கொண்டாட எந்தவித தடையும் இல்லை. ஆனால் அத்துமீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சில அமைப்புகள் காதல் ஜோடிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். சட்டத்தை மீறும் வகையில் யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜேந்திரன் கூறினார்.

இத‌னிடையே காதலர் தினத்தன்று "காதல் திருமணம் ஆபத்து என்று நோட்டீஸ் வழங்கப்படும்'' சிவசேனா கட்சியினர் அறிவி‌த்து‌ள்ளன‌ர்.

இது குறித்து சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ஆர்.குமாரராஜா கூறுகையில், "காதலர் தினத்தன்று காதல் செய்து திருமணம் செய்வது ஆபத்தானது என்று துண்டு நோட்டீஸ் கொடுக்க போகிறோம். காதலர் தினத்தன்று நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் கலச்சார சீரழிவை தடுக்க கோரி ஓட்டல்களுக்கு சென்று நேரில் அறிவுரை வழங்க போகிறோம்'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்