ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

திங்கள், 18 ஜூன் 2012 (19:39 IST)
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இந்த‌ப் பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயத்தை சார்ந்த தொழில் செய்தே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மழையில்லாத காரணத்தால் விவசாயத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வறட்சியினால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கூட விற்க வேண்டிய நிலைக்கு௦‌‌த் தள்ளப்பட்டனர். விவசாய கிணற்றில் இருந்த சொற்ப தண்ணீரும் வற்றிவிட்டதால் விவசாயம் கேள்விகுறியானது. இந்த நிலையில் கடந்த மாதம் பரவலாக ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வாடியிருந்த விவசாய பயிர் சற்று வளம்பெற‌த் தொடங்கியது.

அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் வீச‌த் தொடங்கியது. இதனால் மீண்டும் விவசாய கிணறுகள் வற்றிவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வறண்டு காணப்பட்ட விவசாய நிலத்தில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்