தை அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் செய்வதன் சிறப்பு!

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (17:13 IST)
பொதுவாக அமாவாசை தினங்கள் என்றாலே இருட்டு, கருமை என்பதே அனைவரிடத்திலும் இருந்து வரும் கருத்தாக உள்ளது. ஆனால் இந்து தர்மப்படி அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை - வழிபாடுகளை ஏற்க இப்பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அமாவாசை நாட்களிலோ அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் கழித்தோ மூதாதையரை வழிபடும் வழக்கம் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை எனலாம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் (ஜனவரி 29,2006) ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசை தினம் வருகிறது.

பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்ற ஒரு ஐதீகம் நிலவுகிறது.

வேலைப்பளு மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் அமாவாசைகளை மறந்து விட்டோர் இந்த ஆண்டில் ஞாயிற்றுக் கிழமையன்று தை அமாவாசை அமைவதால் நிச்சயம் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மூதாதையர்களுடனான பூர்வ ஜென்ம தொடர்பை புதுப்பித்து வாழ்க்கையில் பலன் அடையலாம்.

அன்றைய தினம் எப்படி?


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக - பிரகாச ஜோதியாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள். இது காணக்கிடைக்காத கண்கொள்ளாக்காட்சி.

ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பூர்வஜென்ம பலன்கள் தொடர்ந்து வருவதாகக் கருதப்படுவோரும், தங்களின் முன்வினை நீடிப்பதாகக் கருதுவோரும் தை அமாவாசை நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ அல்லது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவார்கள் என்று ஆண்டாண்டு காலமாக அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வோர் உண்டு.

தவிர பொதுவாகவே அமாவாசை என்றால் சிவன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலுமே சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தை அமாவாசை நாளில் முருகப்பெருமான் உறையும் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. முருகப்பெருமானைப் பொறுத்தவரை தமிழ்க்கடவுள் என்பதால், தமிழ் மாதங்களில் முக்கிய மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் முருகருக்கு சிறப்பு செய்யப்படுவதாக கருதலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்