தனுஷ், ஜீ.வி.பிரகாஷ்.... இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை?

தனுஷ் - ஜீ.வி.பிரகாஷ் மோதல்தான் இப்போது ஹாட். தனுஷ் நடிக்கிற படத்தில் ஜீ.வி.பிரகாஷின் பெயர் வராமல் பார்த்துக் கொள்கிற அளவுக்கு திரையுலகில் இவர்களின் சண்டை பெத்த பேமஸ்.


 


அப்படி என்னதான் வாய்க்கால் வரப்பு தகராறு இவர்களுக்குள்?
 
இளம் இசையமைப்பாளர்களில் ஷோலோவாக சொல்லியடித்துக் கொண்டிருந்த ஜீ.வி.பிரகாஷுக்கு அனிருத் என்ற அல்டிமேட் எதிரியை அறிமுகப்படுத்தியவர் தனுஷ். ஒரு படத்தோடு ஓய்ந்ததா என்றால் இல்லை. தொடர்ச்சியாக அனிருத்துக்கு வாய்ப்புகள் வழங்கி அனிருத்தை ஆலமரமாக துளிர்க்கவிட்டார் தனுஷ். அதுதான் இவர்களுக்குள் விழுந்த முதல் கசப்பு என்கிறது கோடம்பாக்கம். 
 
இசையமைப்பாளராக இருந்தவரை அடக்கி வாசித்த ஜீ.வி.பிரகாஷ் நடிகரான பிறகு, 'ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது தம்பி' என்று பாப்கார்ன் விற்பவர் தொடங்கி படம் எடுப்பவர்வரை சொல்லும் அளவுக்கு திறந்த பைப்பும் வழியும் தண்ணியுமானார். ஆங்கில நாளிதழ் ஒன்று பிரபல நடிகர் யார் என்று கணக்கெடுப்பு நடத்தி தனுஷை பிரபல நடிகராக அறிவித்தது. இதில் ஜீ.வி.பிரகாஷுக்கு என்ன அக்கப்போரோ.
 
அந்த ஆங்கில நாளிதழின் நிருபர் என்னை தொடர்பு கொண்டு, விஜய்தான் பிரபல நடிகராக தேர்வாகியிருக்கிறார், அவரை பேட்டி எடுக்க வேண்டும், சிபாரிசு செய்ய முடியுமா என்று கேட்டதாகவும். விஜய் அண்ணாவுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு, ஆனால் அதை மிஸ்யூஸ் பண்ண மாட்டேன் என்று மறுத்ததாகவும் ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்தார். பேட்டி கிடைக்காததால்தான் விஜய்யை தவிர்த்து தனுஷை பிரபல நடிகராக்கிவிட்டார்கள் என்று ஜீ.வி.பிரகாஷ் கொதித்திருந்தார். இதில் எத்தனை சதவீதம் உண்மை என்று தெரியாது. விஜய்யிடம் நேரடியாக பேட்டி கேட்க முடியாத அளவுக்கா ஒரு ஆங்கில நாளிதழ் இருக்கிறது என்பதும் ஆராய வேண்டியது.
 
ஜீ.வி.பிரகாஷின் இந்த அன்வான்டட் அக்கப்போர் காரணமாக தனுஷும் அவரது சுற்றமும் நட்பும் ஜீ.வி.பிரகாஷ் மீது கடுப்பில் உள்ளது. இதன் நீட்சிதான் வடசென்னை படத்தில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டதும். வெற்றிமாறன் படம் என்றால் இசை ஜீ.வி.பிரகாஷ் என்ற சரித்திரத்தை தனுஷ் மாற்றி எழுதியிருக்கிறார். பதிலுக்கு எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் தனுஷை ஜீ.வி.பிரகாஷ் கிண்டலடித்துள்ளார்.
 
தொடரி பட விழாவில் தனுஷை பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார், இளைய சூப்பர் ஸ்டார் என்று பாராட்டினர். விஜய்யின் பிறந்தநாளான நேற்று, தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று வாழ்த்தியிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். எங்கு அடித்தால் எங்கு துடிக்கும் என்பது ஜீ.வி.பிரகாஷுக்கு தெரிந்திருக்கிறது. 
 
உடனே, தனது ட்விட்டர் பக்கத்தின் புரபைல் படத்தை தனுஷ் மாற்றினார். சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற லோகோ அதனை இப்போது அலங்கரிக்கிறது. இவங்க நடிக்கிற படத்தைவிட இவங்களோட அக்கப்போர் திடுக் திருப்பமும், திகைக்கிற பெர்பாமுன்சுமாக இருக்கே.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்