சுண்டைக்காயின் சிறப்பு சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காய் மட்டுமல்ல, அதன் இலைகள், வேர், கனி என முழுத் தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக்கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும்.