அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் புதினா !!
பசியைத் தூண்டுவதற்கு புதினாகீரை பெரிதும் உதவும். சிறுநீரைப் பெருக்கும், வாயுப் பிரச்சனையை நீக்கும். சுவையின்மைப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் வாந்தி வரும் உணர்வு இருப்பவர்களும், புதினாவை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
புதினாவுடன் உலர்ந்த பேரீச்சம்பழம், மிளகு, இந்துப்பு, உலர்ந்த திராட்சை, சீரகம் சம அளவு சேர்த்து, எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும். இதை, உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். காய்ச்சலின் போது ஏற்படும் வாய் கசப்பைப் போக்கும். ருசியை உணரவைக்கும்.
புதினாவை நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் சமயங்களில், உலர்ந்த புதினா ஒரு கைப்பிடி எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை, மூன்று, நான்கு மணி நேர இடைவேளையில் 30 - 60 மி.லி குடித்துவந்தால், காய்ச்சல் சரியாகும்.
ஈரில் ரத்தம் வடிதல் பிரச்னை சரியாகவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும், புதினா இலையை, நிழலில் காயவைத்துப் பொடித்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.
புதினா இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பெப்பர்மிண்ட் தைலத்தை போல இருக்கும். ஆனால், காரம் குறைவாக இருக்கும். இந்த எண்ணெய்யைத் தலைவலி வந்தால் தடவலாம். இந்த எண்ணெய்யை, சிறிதளவு நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுவலி, வயிறு மந்தம் நீங்கி நன்றாகப் பசி எடுக்கும்.
புதினாவின் வாசனைக்கு, கொசுக்களை விரட்டும் தன்மை உண்டு. எனவே, வீட்டில் புதினா செடிகளை வளர்க்கலாம். புதினா கீரை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, தலையின் பக்கவாட்டில் தடவ, தலைவலி நீங்கும்.
தலைவலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பூசப்படும் களிம்புகளிலும் செரிமானக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது.