வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
வாழைப்பூ கஷாயம் செய்ய: வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன் இஞ்சி 5 கிராம், பூண்டு பல் 5, நல்ல மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், கொத்தமல்லி விதை 1 ஸ்பூன், கறிவேப்பிலை 5 இணுக்கு எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.
பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.