இயற்கை வைத்தியத்தின் மூலம் எலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி...?
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (11:15 IST)
வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.
மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.
சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.
எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும். எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.
எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும். எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு முறைகள்:
சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.