ஆவாரை செடி வகையைச் சார்ந்தது. புதர்செடி அமைப்பிலும் வளரும். பளிச்சிடும் தங்க மஞ்சள் நிறமான, கொத்தான பூக்களை உடைய தாவரம். மெல்லிய, தட்டையான காய்களை உடையது.
சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் இயற்கையாக ஆவாரை வளர்ந்திருக்கும். தலபோடம், ஆவீரை, மேகாரி, ஆவாரம் ஆகிய மாற்றுப்பெயர்களும் உண்டு. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.
வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
ஆவாரை பூக்கள் இருபதைப் பசைபோலச் செய்து, புளித்த மோரில் கலக்கிக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு செய்து வர நீரழிவு கட்டுப்படும்.
மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
ஆவாரையின் வேர், இலை, பட்டை, பூ, காய் இவற்றைச் சம எடையாகச் சேகரித்து, காயவைத்து, இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, 10 கிராம் வீதம், காலை, மதியம், மாலை வேளைகளில் வெந்நீருடன் உட்கொள்ள வேண்டும்.