மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு.
அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
30 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது, என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.