மலர்களில் அறிய மருத்துவம்

வெள்ளி, 29 மார்ச் 2013 (17:51 IST)
மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே அதனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம். அப்படிப்பட்ட மலர்களின் குணங்களும் பயன்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆவாரம் பூ

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அத்திப்பூ

அத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ

உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

செம்பருத்திப்பூ

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

வேப்பம்பூ

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

மல்லிகைப்பூ

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

குங்குமப்பூ

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்