மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து நகைச்சுவை செய்த குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல மேடை நகைச்சுவை கலைஞரான குணாம் கம்ரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலான நிலையில் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சியினர் குணால் கம்ராவின் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கினர்.
மேலும் குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று குணால் காம்ரா மறுத்தார். அதை தொடர்ந்து அவரது ஸ்டுடியோ விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதை இடித்து தரைமட்டமாக்கினர்.
இந்நிலையில் குணால் கம்ராவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ள மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் “இந்திய பிரதமர், இந்து கடவுள்களை நீ அவமதித்தால் அதற்கான தண்டனையை நீ அனுபவிப்பாய். இந்தியாவில் நீ இதுபோல நடந்துகொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ரசிப்போம் ஆனால் இந்த மாதிரி நகைச்சுவையை மகாராஷ்டிரா ஏற்றுக் கொள்ளாது” என கூறியுள்ளார்.
மேலும் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் பேசும்போது “அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விடாது. மன்னிப்பு கேட்காமல் வெளியே வந்து அவர் எங்கு ஒளிய முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்” என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
Edit by Prasanth.K