தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

Mahendran

திங்கள், 17 பிப்ரவரி 2025 (10:34 IST)
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யமுனை நதியை தூய்மைப்படுத்துவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்னரே, யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

யமுனை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது டெல்லி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், தூய்மைப்படுத்தி தருவதாக ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், சுத்தம் செய்யும் பணியை டெல்லி பாஜக அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டெல்லி கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது. நீரில் மிதக்கும் குப்பைகள் மற்றும் செடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்நிலைகளின் அடியில் உள்ள மண்ணை அகற்றும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்த துணைநிலை ஆளுநர், உடனடியாக நதியை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில மாதங்களில் யமுனை நதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, அங்கு புனித நீராடும் நிலை கொண்டு வரப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்