மிஸ்ரா இல்லைன்னா அமலாக்கத்துறை செயல்படாதா? – மத்திய அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்!

வியாழன், 27 ஜூலை 2023 (16:25 IST)
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பணி நீட்டிப்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.



அமலாக்கத்துறையின் இயக்குனராக எஸ்.கே.மிஸ்ரா நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். அமலாக்கத்துறை இயக்குனருக்கு ஓய்வு வழங்குவது குறித்து ஏற்கனவே நடந்த வழக்கில் ஜூலை 31ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பணிக்காலம் முடிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் சில பகுதிகளில் அமலாக்கத்துறையினரின் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பணிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் “எஸ்.கே.மிஸ்ராவை தவிர ஒட்டுமொத்த அமலாக்கத்துறையினரும் திறமையற்றவர்களா? அவர் இல்லாமல் அமலாக்கத்துறை செயல்படாதா?” என்று காட்டமான கேள்விகளை எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் எஸ்.கே.மிஸ்ராவை தொடர்ந்து இயக்குனர் பொறுப்பில் நீட்டிக்க மத்திய அரசு முயற்சி செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்