செந்தில் பாலாஜி வழக்கு எப்போது நிறைவடையும்.? ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!!

Senthil Velan

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (18:18 IST)
செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களிடம், மூன்றாவதாக புதிய குறிப்பு ஒன்றை தாக்கல் செய்து வாதிட வேண்டும் எனக் கூறுகிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய குறிப்பு சொலிசிட்டர் அல்லது அமலாக்கத் துறை வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்படுகிறது. இன்னும் எத்தனை குறிப்புகள் முன்வைக்க உள்ளீர்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன்வைத்து வருகிறது” என்று கூறப்பட்டது. அமலாக்கத் துறை தரப்பில், மாநில அரசு (தமிழக அரசு) மனுதாரர் செந்தில் பாலாஜிக்கு உதவி வருவதாக குற்றம்சாட்டியது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்கட்டும். நாங்கள் இந்த வழக்கில் தற்போது உத்தரவை பிறப்பிக்கிறோம்” என்றனர்.
 
அதற்கு அமலாக்கத் துறை, “இந்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது வரையில் முடிக்கவில்லை. இதில் செந்தில் பாலாஜி தரப்பில் 13 முறை வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.  ஆனால், அமலாக்கத் துறை ஒருமுறை கூட அவ்வாறு கேட்கவில்லை. எனவே விசாரணை தாமதம் ஆவது குறித்து தனியாக நாங்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம்” என்று கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அமலாக்கத் துறை வெவ்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. 
 
எங்களைப் பொறுத்தவரை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் விசாரணை நடைமுறைகளை தான் நாங்கள் விசாரிக்கிறோம். இந்த விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. மணிஷ் சிசோடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, “செந்தில் பாலாஜிக்கும் அதே வகையில் ஜாமீன் வழங்க முடியும்தானே?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
அப்போது, “இந்த வழக்கில் சாட்சியங்களாக இருப்பவர்கள் தரப்பில், ஏற்கெனவே இதே விவகாரத்தில், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கொடுத்தபோது, ஒரு விசாரணை அமைப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.  ]எனவே, இந்த வழக்கின் சாட்சிகள் ஒருவித அச்சத்துடன் தான் இருக்கிறோம். எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “இந்த வழக்கின் விசாரணை எப்போது நிறைவடையும் என்ற இடத்துக்கு வழக்கை அமலாக்கத் துறை கொண்டு சென்றுள்ளது. 
 
ஆனால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. ஒரு வழக்கின் விசாரணை முடியும் வரையில், ஒருவரை சிறையிலேயே தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. மனுதாரர் 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கவில்லை. விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை. சிறையில் இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் முன்பு அமைச்சராக இருந்தார், தற்போது அமைச்சர் பதவியிலும் இல்லை” என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு அரசும் அனுமதி வழங்கவில்லை? மனுதாரரின் பலம் சாட்சிகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறதே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், “மனுதாரர் தற்போது அமைச்சர் என்ற அதிகாரத்தில் இல்லை. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்த வழக்கின் விசாரணை எப்போது நிறைவடையும் என்பதையும் கூற முடியாது. 

ALSO READ: ஆணவக்கொலை தொடர்பாக “ரஞ்சித் பேசியதை தீவிரவாத செயலாகத்தான் பார்க்க வேண்டும்" - காவல் ஆணையர் அலுவலகத்தில் வன்னி அரசு புகார்.!
 
மனுதாரர் முன்னாள் அமைச்சர். 5 முறை சட்டப்பேரவை உறுப்பினர். எனவே, அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார். எனவே, இதை எல்லாம் கவனத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்