மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற தகவல்களை ஆன்லைனில் தேடிய 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில், சத்ரபதி நகர் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். படிப்பில் இவர் மிகவும் சிறந்து விளங்கியதாகவும், ஹிந்தி மட்டும் இன்றி மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென நேற்று அந்த மாணவி தனது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில், மாணவி கத்தியால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து விசாரணை செய்யும் போது, ஆன்லைனில் தற்செயலாக அவர் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதைத் தேடியதாகவும், அதில் அதிக ஆர்வம் காட்டிய நிலையில், மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்பதை உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.