இந்தியனா இருந்தா போதும்.. விசா இல்லாம இத்தனை நாடுகளுக்கு போகலாமா?

புதன், 1 நவம்பர் 2023 (13:55 IST)
நீங்கள் இந்தியராக இருந்து, உங்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தால் போதும் உலகின் பல நாடுகளுக்கு விசா செலவு இல்லாமலே சுற்றுலா சென்று வர முடியும். அந்த நாடுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.



சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை, விசா இல்லாமலே தாய்லாந்து வந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. போகிறோமோ இல்லையோ தாய்லாந்து செல்ல விமான டிக்கெட் எவ்வளவு என்று கூட பலர் தேட தொடங்கி விட்டார்கள். இந்த விசா இல்லா இலவச பயணம் மே,05, 2024 வரை அமலில் இருக்கும் என தாய்லாந்து தெரிவித்துள்ளது. இவ்வாறு விசா இல்லாமல் தாய்லாந்து செல்லும் இந்தியர்கள் அங்கு 30 நாட்கள் வரை தங்கலாம். இதுபோல விசா இன்றி இந்திய பாஸ்போர்ட் இருந்தாலே இலவசமாக பயணிக்க கூடிய மேலும் சில நாடுகளும் உள்ளன.

கூக் ஐலேண்ட்ஸ்: நியூசிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள கூக் ஐலேண்ட் தீவு அழகான கடற்கரை சூழ் சுற்றுலா பகுதியாகும். இந்த தீவிற்கு செல்ல இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு விசா தேவையில்லை. அதிகபட்சமாக 30 நாட்கள் வரை தங்கலாம்.



மொரிஷியஸ் : இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான மொரிஷியஸ் பரந்து விரிந்த வெள்ளை கடற்கரைகளையும், பல பவளப்பாறைகளையும் கொண்டது. இங்கு செல்ல இந்தியா உட்பட 100 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் அதிகபட்சம் 90 நாட்கள் வரை தங்கலாம்.

பூட்டான்: இந்தியாவின் குட்டி அண்டை தேசமான பூட்டான் அழகான மலைத்தொடர்களுக்கும், பல இந்து கோவில்களுக்கும் பெயர் போனது. பூட்டான் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. ஆனால் பாஸ்போர்ட் மற்றும் இந்திய அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.



ஹாங்காங்: சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங் அழகான கடற்கரைகளும், வியக்க வைக்கும் பிரம்மாண்டமான கட்டிடங்களையும், ஆச்சர்யப்படுத்தும் அக்குவாரிய பூங்காக்களையும் கொண்டது. இங்கு விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட்டை வைத்து மட்டும் அதிகபட்சம் 14 நாட்கள் தங்கலாம்.

பர்படோஸ்: இந்த பர்படோஸ் தீவு கரீபியன் கடலின் ஆபரணம் என அழைக்கப்படுகிறது. கண்ணை பறிக்கும் அழகான கடற்கரைகளையும் அதை ஒட்டிய உயரமான மலைகளையும் கொண்ட இந்த் தீவு இயற்கையின் அற்புதம். இங்கு விசா இன்றி இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்கள் 90 நாட்கள் வரை ஜாலியாக சுற்றி வரலாம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்