நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை - வெங்கய்யா நாயுடு

திங்கள், 27 ஏப்ரல் 2015 (19:47 IST)
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
ஹைத்ராபாத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மறு பரிசீலனை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதே போல் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது, மறுவாழ்வு அளிப்பது ஆகியவற்றிலும் மறுபேச்சுக்கு இடம் இல்லை. இவை அனைத்தும் கொண்ட நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன் அளிக்க கூடியதாகும். 
 
நிலமே இல்லாமல் ஏர்போர்ட், தேசிய நெடுஞ்சாலை, கிராம சாலைகள், ஏழைகளுக்கான வீடுகள், அரசு மருத்துவமனைகள், தண்டவாளங்கள் போன்றவற்றை எவ்வாறு அமைக்க முடியும், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நிலம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இந்த விசயத்தில் எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறாக திசை திருப்ப பார்க்கின்றன. மத்திய அரசு ஒரு போதும் விவசாயிகளை ஏமாற்றாது. இதை காங்கிரஸ் கட்சி தனக்கு கிடைத்த அருமருந்து என்று தெரிவித்துள்ளது. இது சுத்த அர்த்தமற்ற பேச்சாகும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் கருத்து வறட்சி ஏற்பட்டு விட்டது என்பது நன்றாக தெரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் செத்து விட்டதா? நில மசோதாவில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்