கொலை குற்றவாளி யார்? சாமியாரிடம் குறி கேட்ட போலீஸ்! – உத்தர பிரதேசத்தில் சர்ச்சை!

ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (12:36 IST)
உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு குறித்து விசாரிக்க சாமியாரிடம் போலீஸார் குறி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள சத்ராபூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியின் உறவினர்களான ரவி அஹிர்வார், ராகேஷ் அஹிர்வார் மற்றும் அமன் அஹிர்வார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை சரியாக கண்டறிய முடியாத நிலையில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் அசோக் ஷர்மா அப்பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவரிடம் வழக்கு ஃபைலை காட்டி குறி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சாமியார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் பெயர் உங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டார் என பூடகமாக என்னவோ சொல்லியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீஸார் சாமியாரிடம் குற்றவாளி குறித்து குறி கேட்ட சம்பவம் பெரும் கண்டனங்களை சந்தித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து சத்ராபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்