சமீபத்தில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி டவ்தே புயலாக மாறி குஜராத் அருகே கரையை கடந்தது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பல பாதிப்புகளை சந்தித்தது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மே 24 ஆம் தேதி புதிய புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மே 26 ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்ககடலில் யாஸ் புயல் உருவாவதையொட்டி 22 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்த என ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் வரும் 29 ஆம் தேதி வரை இயக்கப்படவிருந்த நாகர்கோவில் - ஹவுரா, திருச்சி - ஹவுரா, சென்ட்ரல் - புவனேஷ்வர் உள்ளிட்ட 22 சிறப்பு ரயில்களின் சேவை ரத்து.