சமூக விரோதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாலியல் தொல்லை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் நாள் தோறும் பலர் கைது செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்ட காவல் நிலையத்திற்கு போன் செய்த மர்ம நபர்கள், விபத்து நடந்திருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தில் சிக்கியவரை மீட்க அவர் அருகில் சென்றுள்ளனர். சற்றும் எதிர்பாரா விதமாக, அடிபட்ட நபர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியை நீட்டினார். செய்வதறியாது திகைத்த போலீஸாரை, மர்ம நபர் மற்றும் அவருடன் வந்த 4 நபர்கள், கட்டிப்போட்டு போலீஸ் வேனில் ஏற்றினார்.
அத்தோடு இல்லாமல் காவல் வாகனத்தை பயன்படுத்தி, இளம்பெண் ஒருவரையும் அந்த மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் போலீசாரையும், போலீஸ் வாகனத்தையும் விடுவித்தனர். இதனையடுத்து போலீஸார் இரண்டு தனிப்படை அமைத்து அந்த பெண்ணையும், அவரை கடத்தியவர்களையும் தேடி வருகின்றனர்.