தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் விசாரணை ; தமிழக போலீசார் அதிரடி

செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (15:21 IST)
கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு தமிழக போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.  
 
மேலும், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர்.  அந்நிலையில், சமீபத்தில் அவர்கள் அங்கிருந்து கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாறினர். 
 
இந்நிலையில், அந்த விடுதிக்கு இன்று தமிழக போலீசார் சென்றனர். கோவை பதிவு எண் கொண்ட வண்டிகளில் போலீசார் சென்றுள்ளனர். எம்.எல்.ஏக்கள் சுய விருப்பத்தில் தங்கியிருக்கிறார்களா அல்லது கட்டாயத்தின் பேரில் தங்கியிருக்கிறார்களா என அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
முதல்வரை மாற்றுவோம் அல்லது இந்த ஆட்சியை கலைப்போம் என தினகரன் நேற்று இரவு கூறியிருந்தார். மேலும், இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா நியமனம் செல்லாது எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்நிலையில்தான், தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு போலீசார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்